சுகாதார ஆய்வாளர் பணியிடமாறுதல் வழக்கு: நகராட்சி நிர்வாக ஆணையர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 12th April 2019 07:15 AM | Last Updated : 12th April 2019 07:15 AM | அ+அ அ- |

சுகாதார ஆய்வாளரின் பணியிட மாறுதல் தொடர்பான வழக்கில் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராஜாராம் தாக்கல் செய்த மனு: கடந்த 2017 ஆம் ஆண்டு செங்கோட்டை நகராட்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தேன்.
அப்போது எனது தாயாருக்கு உடல்நிலை சரி இல்லாததால், எனது சொந்த மாவட்டமான விருதுநகர் அருகே இடமாறுதல் தரும்படி விண்ணப்பித்தேன். அதனடிப்படையில் எனக்கு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிவகாசி நகராட்சிக்கு பணியிடமாறுதல் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி சிவகாசியில் இருந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சிக்கு நான் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளேன். எனவே இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர் தரப்பில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால், அங்கு செல்லத் தயாராக இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதுகுறித்து பரிசீலனை செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு பணியிட மாறுதல் குறித்து எவ்வித உத்தரவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நகராட்சி நிர்வாக ஆணையர் ஏப்ரல் 25 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G