தொகுதி நிலவரம்: சாத்தூரில் வெற்றி யாருக்கு?

விருதுநகர் மாவட்டத்தின் தென் திசையில் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகரம் அமைந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் தென் திசையில் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு தீப்பெட்டி, பேனா நிப்பு, காரச்சேவு தயாரிப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. மறு சீரமைப்புக்கு பின்னர் சாத்தூர் சட்டப்பேரவைத்  தொகுதி, சாத்தூர் நகராட்சி, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தாலுகா பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. 
கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்றுள்ள பொதுத்தேர்தல்களில், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமை வாய்ந்த தொகுதியாகவும் உள்ளது. 
இத்தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  மூன்று முறை அதிமுக சார்பிலும், இரண்டு முறை திமுக சார்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
30 பேர் போட்டி: 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறினார். இதனைத்தொடர்ந்து இவர் உள்பட 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து  சாத்தூர் உள்ளிட்ட 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது சாத்தூர் இடைத்தேர்தலில் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (அதிமுக),  எஸ்.வி.சீனிவாசன் (திமுக), எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் (அமமுக) ஆகிய 3 கட்சி வேட்பாளர்கள் மட்டுமே முன்னணியில் உள்ளனர். இதுதவிர மநீம, நாம் தமிழர் மற்றும் 25 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
அதிமுக சார்பில் மல்லியை சேர்ந்த எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் போட்டியிடுகிறார். கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த, கோசுகுண்டு எஸ்.வி. சீனிவாசனே இந்த முறையும் களம் காணுகிறார்.  கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், இம்முறை  அமமுக சார்பில் போட்டியிடுகிறார். சாத்தூர் தொகுதியில் முக்குலத்தோர் மற்றும் நாயக்கர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.  இதர சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர். பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு: கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  அப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக வைப்பாற்றின் குறுக்கே தடுப்பணை, அரசு கலைக் கல்லூரி, புதிய தாலுகா, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், புதிய அரசு மருத்துவமனை போன்ற பணிகளை நிறைவேற்றினார். தற்சமயம் நிறைவேற்றப்படாத திட்டங்களான பாதாளச் சாக்கடை திட்டம், புதிய பேருந்து நிலையம், தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டம், படந்தால் சந்திப்பில் மேம்பாலம், தொழிற்பேட்டை போன்ற திட்டங்ளை நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
பலம் மற்றும் பலவீனம்: சமுதாய வாக்குகள் மற்றும் புதிய தமிழகம், பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் அதிமுகவின் பலமாக கருதப்படுகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜவர்மன் அக்கட்சியில் பிரபலமாக இருந்தாலும், தொகுதிக்கு புதியவர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக சாத்தூர் தொகுதியில் எவ்வித புதிய திட்டங்களும் அரசு செயல்படுத்தவில்லை என்பது பலவீனமாக உள்ளது மக்களின் கருத்தாகும்.
கடந்த முறை போட்டியிட்டு தோல்வியுற்ற திமுக வேட்பாளர் எஸ்.வி.சீனிவாசன் தனது சமுதாய வாக்குகளையும், கூட்டணிக் கட்சியான மதிமுகவின் வாக்குகளும் கணிசமான முறையில் பெறலாம் என்பதே அவரது பலமாக உள்ளது. 
கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் இந்த முறை அமமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே தொகுதிக்கு அறிமுகமானவர். மேலும் இளைஞர்கள் மத்தியிலும், சமுதாய ரீதியாகவும் தினகரனுக்கு ஆதரவு பெருகி உள்ளதால் அதிக வாக்குகள் பெற்று விடலாம் என்பதே இவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.  
சமுதாய வாக்குகள்: மொத்தத்தில் சாத்தூர் தொகுதியில் பிரதான கட்சி சார்பில் போட்டியிடும் மூன்று முக்கிய வேட்பாளர்களும் சமுதாய வாக்குகளை பிரிப்பதால் இதர சமுதாயத்தின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. இதனால் இந்த முறை சாத்தூர் தொகுதியை கைப்பற்ற பிரதான கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்     1,13,506
பெண்கள்    1,19,010
மூன்றாம் பாலினத்தவர்    21
மொத்த 
வாக்காளர்கள்    2,32,537    
-மா.ஆனந்தகுமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com