இறுதிக் கட்ட பிரசாரம்: விருதுநகரில் வாகனங்களில் சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வாகனங்களில் சென்று இறுதிக் கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வாகனங்களில் சென்று இறுதிக் கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
      தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்கிறது. 
      விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர், தேமுதிக சார்பில் ஆர். அழகர்சாமி, அமமுக சார்பில் பரமசிவ ஐயப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் அருள்மொழி தேவன், மக்கள் நீதி மய்யம் சார்பில் முனியசாமி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
      இந்நிலையில், தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சமக தலைவர் சரத்குமார், தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் பிரசாரம் செய்தனர். 
      அதேபோல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். 
     தொடர்ந்து, அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
     தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் கடுமையான வெயில் நிலவி வருவதால், தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலை, மாலை வேளைகளில் மட்டுமே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வடைவதால், பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை, வேட்பாளர்கள் தங்களது பிரசார வாகனங்களில் சென்று விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாக வாக்கு சேகரித்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com