சுடச்சுட

  

  மரத்தில் கார் மோதல்: ஸ்ரீவிலி. அமமுக பிரமுகர் மனைவி பலி; 7 பேர் காயம்

  By DIN  |   Published on : 17th April 2019 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை கார் மரத்தில் மோதியதில், அமமுக ஒன்றியச் செயலரின் மனைவி உயிரிழந்தார். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
      ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நக்க மங்கலத்தைச் சேர்ந்தவர் கி.காளிமுத்து (56). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார். 
     இவரது குடும்பத்தினர் மதுரை அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காரில் சென்று சாமி  கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி சாலையில் நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் இறக்கத்தில் கார் தாறுமாறாக ஓடி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. 
    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காளிமுத்துவின் மனைவி பாமா (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    காரை ஓட்டி வந்த காளிமுத்துவின் மருமகன் காளிராஜ் (39), அவரது மனைவி வீரலட்சுமி (33),  அவர்களது மகன் அரவிந்த கண்ணன் (17), கார்த்திக் பாலு (10),  காளிமுத்துவின் மற்றொரு மகள் அமுதா (31), அவரது மகள் கனிமொழி (15), மகன் காளிராஜ் (12) ஆகிய அனைவரும் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
       காளிமுத்துவின் குடும்பத்தினர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து ஸ்ரீவில்லிபுத்தூரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும்  அமமுகவினர்  அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai