முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசியில் அடுத்த ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 04th August 2019 03:46 AM | Last Updated : 04th August 2019 03:46 AM | அ+அ அ- |

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி சிவகாசியில் 2020 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
சிவகாசியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டின் புதிய வரவாக, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான களரி உள்ளிட்டவைகளை படத்துடன் அச்சிட்டு, அந்த விளையாட்டுப் பற்றி சிறு குறிப்பும் கொண்டதாக தினசரி காலண்டர் உள்ளது. இந்த வகை தினசரி காலண்டர், மாத காலண்டர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமி படங்கள், குழந்தைகள் படங்கள் உள்ளிட்டவை ரியல் ஆர்ட் பேப்பர், கோல்டு, சில்வர் பாயில்ஸ், லேசர் பிரிண்ட் மூலம் அச்சிடப்படுகின்றன. டை கட்டிங் முறையில் காலண்டர் அட்டைகள் உள்ளன. முப்பரிமாண படங்கள் அச்சிட்டும் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஒரு காலண்டரின் விலை ரூ. 15 முதல் ரூ.1800 வரை உள்ளது.
தினசரி காலண்டர் தயாரிப்பு குறித்து தமிழ்நாடு தினசரி காலண்டர் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் ஜெய்சங்கர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அச்சு காகிதம், காகித அட்டை, அச்சுக்கூலி, தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. எனவே 2020 ஆம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் விலை 5 முதல் 7 சதம் வரை கடந்த ஆண்டை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் விளம்பரம் வீடுகளுக்கு சென்றடைய தினசரி காலண்டர் உபயோகப்படுவதால், ஆண்டுக்கு ஆண்டு இதன் தேவை அதிகரித்து வருகிறது.
சிவகாசியிலிருந்து இந்தியா மட்டுமல்லாது, சிங்கப்பூர்,
இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தினசரி காலண்டர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தினசரி காலண்டர் வெகுஜன பயன்பாட்டில் உள்ளதால் தற்போது இதற்கு உள்ள 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என அர
சுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.