கல்லூரியில் காச நோய் விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 04th August 2019 03:44 AM | Last Updated : 04th August 2019 03:44 AM | அ+அ அ- |

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சனிக்கிழமை காசநோய் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தாவரவியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் சீ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், விருதுநகர் மாவட்ட மருத்துவமனை காசநோய் பிரிவு கண்காணிப்பாளர் டேனியல்ராஜ் பேசியதாவது: போதிய ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களை இந்த நோய் தாக்குகிறது. இது காற்றின் மூலம் பரவக்கூடியநோயாகும்.
காசநோய் நுரையீரலை பாதிக்ககூடிய பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் தொற்று நோயாகும். இருமல், ரத்தத்துடன்கூடிய சளி வெளியேறுதல், உடை எடை குறைவு உள்ளிட்டவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
நாம் தினமும் உண்ணும் உணவில், மாவுசத்து, புரதச் சத்து, கொழுப்புசத்து, வைட்டமின்கள் போன்றவை இருக்க வேண்டும். இது போன்ற சத்து உள்ள உணவுகளை உண்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் இந்த நோய் வராது, நோய் கண்டறியப்பட்ட உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று முறையாக சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
திருத்தங்கல் அரசு மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் ஆலோசகர் சங்கர், எய்ட்ஸ் நோய்பரவும் முறைகள் குறித்தும், அதற்கு
உரிய சிகிச்சைகள் குறித்தும் பேசினார். முன்னதாக துறைத்தலைவர் எம்.சுஜாதா வரவேற்றார்.
உதவிப் பேராசிரியர் இனியஉதயா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் அ.சர்வலிங்கம் செய்திருந்தார்.