சதுரகிரி கோயிலுக்கு அனுமதி மறுப்பு: சிற்றுந்தை சிறை பிடித்து பக்தர்கள் போராட்டம்
By DIN | Published On : 04th August 2019 05:14 AM | Last Updated : 04th August 2019 05:14 AM | அ+அ அ- |

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல சனிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள், சிற்றுந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் திருக்கோயிலில் ஆடி அமாவாசை விழா கடந்த ஜூலை 31 இல் நடைபெற்றது.
இதை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்கு சென்று வர ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.
சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கோயிலுக்கு செல்ல பக்தர்கள் முயற்சி செய்தனர். அப்போது, அங்கிருந்த வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்கு நின்ற சிற்றுந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வத்திராயிருப்பு போலீஸார், பக்தர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆறு நாள்கள் மட்டுமே சதுரகிரி மலை கோயிலுக்கு பக் தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, அந்த நாள்களை கடந்து வந்துள்ளதால் வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கும் நாள்களில் மட்டுமே பக்தர்கள் மலை கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள், அடிவாரத்தில் சூடம் ஏற்றி வழிபட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.