திருச்சுழி திருமேனிநாதர் கோயில் ஆடித் தபசு விழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் உடனுறை ஸ்ரீ திருமேனிநாதர் கோயிலில்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் உடனுறை ஸ்ரீ திருமேனிநாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம் சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
திருச்சுழியில்  பூமிநாத சுவாமி கோயில் எனப்படும்  துணை மாலையம்மன் உடனுறை ஸ்ரீ திருமேனிநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி18 ஆம் நாளான சனிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை மற்றும் வாஸ்து சாந்தியுடன் ஆடித்தபசு விழா தொடங்கியது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக சன்னிதானம் முன்  வைக்கப்பட்ட  சுவாமி, அம்பாள் உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு மலர் அலங்காரங்களுடன் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து நந்திதேவர், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றுக்கு சந்தனம், பால், பன்னீர், கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட  பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொடிமரத்தின்அடிப்பாகத்தில் வைக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மேளங்கள் முழக்கத்துடன் கோயில் அர்ச்சகர்களால் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து  துணை மாலையம்மன் மற்றும் ஸ்ரீதிருமேனிநாதர் உற்சவர்கள் நாள்தோறும் காளை, கிளி, அன்னம், சிம்மம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி வரும்  ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை ஆற்றில் அம்மன் எழுந்தருளுதலும்,  அன்றைய தினம் மாலை  4 மணி முதல் 6 மணிக்குள் விழாவின் முக்கிய அம்சமாக ஆற்றங்கரையில் அம்மன் தபசுக்காட்சி அருள்தலும் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com