சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆம்புலன்ஸை அரசு வாகனமாகப் பதிவு செய்ய மறுப்பு

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸை, வட்டாரப் போக்குவரத்துத் துறை அரசு

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸை, வட்டாரப் போக்குவரத்துத் துறை அரசு வாகனமாகப் பதிவு செய்ய மறுத்து வருவதால், ஆம்புலன்ஸ் பயன்பாடின்றி உள்ளது. 
      சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையிருந்து மேல்சிகிச்சைக்கு மதுரை,விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு நோயாளிகளை அனுப்ப, தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வரப்பட்டது. இந்நிலையில், இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கென தனியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தமிழக அரசு கடந்த மாதம் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை மருத்துவமனைக்கு வாங்கிக் கொடுத்தது. 
      இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் குளிர்சாதன வசதி, முதலுதவி வசதி, மைக் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதையடுத்து, இந்த ஆம்புலன்ஸுக்கு, வாகனப் பதிவு எண் பெறுவதற்காக சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகியுள்ளனர். ஆனால் அங்கு, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை என்பது ஒரு கார்ப்பரேஷன். எனவே, இந்த ஆம்புலன்ஸை அரசு வாகனமாகப் பதிவு செய்யமுடியாது என மறுத்துவிட்டனர்.      இதனால், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வந்து ஒரு மாத காலமாகியும் இன்னும் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை. 
     இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைக் கண்காணிப்பாளர் அசோக் கூறியது: தமிழக அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளது. எனவே, அரசு வாகனமாகப் பதிவு செய்யவேண்டும் என, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com