சிவகாசியில் பள்ளி அருகே அடுத்தடுத்து பள்ளம் தோண்டும் பணிகளால் போக்குவரத்து பாதிப்பு

சிவகாசியில் பள்ளி அருகே தொடர்ந்து பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் பள்ளி அருகே தொடர்ந்து பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் 2 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு பள்ளியில் 5,000 மாணவிகளும், மற்றொரு பள்ளியில் 8,000 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டு தேர்வு முடிந்து பள்ளி திறப்பதற்கு இருநாள்கள் முன்னர் கடந்த மாதம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய்  பதிப்பதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டினர். 
இதனால், மாணவர்கள் பள்ளிக்கு  வரும் பாதை மூடப்பட்டதால், விடுமுறை முடிந்து பள்ளித் திறப்பு இரு நாள்கள் தள்ளி வைக்கப்பட்டது. மேலும், பள்ளம் தோண்டியதால் சாலை சேறும் சகதியுமாக மாறியது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சேதம் அடைந்தது. இதனால், மழை பெய்த போது, கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் வழிந்தோடியது. இதனால் சாலை மேலும் சேதம் அடைந்தது. இதைத் தொடந்து, கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம்  தொடங்கியது. இதற்காக இப்பகுதியில் மீண்டும் வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளம் மூடப்பட்ட பின்னர், மீண்டும் ஒரு மாதம் கழித்து குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இந்தப் பள்ளம் சீரமைக்கப்பட்ட பின்னர், கழிவு நீர்வாய்க்கால் அமைக்கும் பணி முடிவடைந்ததும், சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்தனர். இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் மீண்டும் குழாய்  பதிக்க தற்போது பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் இப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து பல்வேறு பணிகளுக்காக தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணிகள் காரணமாக சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியது: குழாய் பதிக்க பள்ளம் தோண்டுவதில் தவறில்லை. 2 மாத காலமாக பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது எந்தப் பணியும் நடைபெறவில்லை. பள்ளி திறந்த பின்னர் பள்ளம் தோண்டியதால் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் பள்ளங்களை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com