ஆடி கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடி வெள்ளி பெருந்திருவிழாவை முன்னிட்டு

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடி வெள்ளி பெருந்திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமையே இருக்கன்குடியில் பக்தர்கள் குவிந்துள்ளனர். 
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற 500ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அர்ச்சுனா நதியும் வைப்பாறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அருகாமையில் இருக்கன்குடி நீர்த்தேக்க அணையின் அருகே காசிவிஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி, தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த ஆகஸ்ட்  9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்று வந்தன. இந்த ஆடி கடைசி திருவிழாவிற்கான கொடியேற்றம் தொடங்கியதிலிருந்தே தென்மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆடிபெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி மகா உற்சவ திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெற உள்ளது. மதியம் 2 மணியளவில் மாரியம்மன் உற்சவரை கோயிலிலிருந்து எழுந்தருளச் செய்து வீதிவலம் வந்து, மூலவர் கோயில் வந்தடைவார். பின்னர் இரவு முழுவதும் அம்மன் சர்வ அலங்காரத்துடன் சப்பரத்தில் வீதி உலா நடைபெறும். ஆடிபெருந்திருவிழாவுக்காக திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. இத்திருவிழாவுக்காக சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   இத்திருவிழாவிற்காக கடந்த புதன்கிழமை முதலே சிவகாசி, சங்கரன்கோவில், ஏழாயிரம்பண்ணை, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக பாதயாத்திரையாகவும், ரதம் இழுத்து பாத யாத்திரையாகவும் வந்த வண்ணம் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com