சாத்தூரில் கிடப்பில் போடப்பட்ட புதிய பேருந்து நிலையம்  அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

சாத்தூரில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததாலும், பயணிகளுக்குத்

சாத்தூரில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததாலும், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததாலும், புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையம் 64 சென்ட நிலப்பரப்பில், 42 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கேற்ப கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில், தற்போது மக்கள் தொகை பெருக்கம் மற்றும் அதிகரித்துள்ள பேருந்துகளின் எண்ணிக்கை காரணமாக இடப்பற்றாக்குறை நிலவுகிறது. 
இதனால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில், 15 ஆண்டுகளுக்கு முன் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, புதிய பேருந்து நிலையம் அமைக்க மரிய ஊருணியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.4.50 கோடி நிதியும் பெறப்பட்டு, பணிகளும் தொடங்கின. 
ஆனால், அதன்பின்னர் அரசியல் மாற்றம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மாற்றம் காரணமாக புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. மேலும், பேருந்து நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வட்டியுடன் சேர்த்து தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்தது. 
இவ்வாறு பல்வேறு காரணங்களால் சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படாமல் கைவிடப்பட்டது. இதனால், பழைய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்த முடியாமல், தற்போது சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. 
சாத்தூரில் புதிய பேருந்து நிலையம்தான் கனவாகிவிட்டது. ஆனால், பழைய பேருந்து நிலையத்தையாவது உரிய முறையில் பராமரிக்கலாமே என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இங்கு, பயணிகளுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி உள்ளது. 
பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் இல்லை. இரண்டு கழிப்பறைகள் இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாததால், பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவிட்டது. 
அதேபோல், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், சமூகவிரோதச் செயல்கள் நடப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. எனவே, சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். அதேநேரம், பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com