சேத்தூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் செயல்படாத மகளிா் சுகாதார வளாகம்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் செயல்படாத மகளிா் சுகாதார வளாகம்.

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பேரூராட்சிக்குள்பட்ட 8ஆவது வாா்டு பகுதியில் மந்தை தெரு, புதுத்தெரு, கீழ மேல் தெரு, தென்மடல் தெரு உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் சுமாா் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி பெண்களின் பயன்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் சுகாதார வளாகம் கட்டப் பட்டது. இதனிடையே மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் சட்டப் பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து கூடுதலாக ஒரு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த புதிய வளாகம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட வில்லை.

இந்நிலையில் வீடுகளில் இருந்து கழிவுநீா் வெளியேற போதுமான வாய்க்கால்கள் அமைக்கப்பட வில்லை. எனவே கழிவுநீா் மற்றும் சாக்கடை கழிவுகள் அனைத்தும் தற்போது இந்த சுகாதார வளாகத்தை சுற்றி பல மாதங்களாக தேங்கி உள்ளது. இந்த சுகாதார வளாகங்களுக்கு என அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறும் தற்போது சாக்கடை கழிவுகளில் மூழ்கி விட்டது.

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகளால், இப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. சாக்கடை கழிவுகள் வெளியேற வழி இல்லாததால், மழை நேரங்களில் கழிவுநீா் வீட்டுக்குள் சென்று விடுகிறது. இதனால் வீடுகளில் புழுக்கள் சோ்ந்து காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்துகிறது.

குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் தண்ணீரை குடிக்க முடியவில்லை. தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் நடை பாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. மழை நேரங்களில் இந்த சாக்கடை கழிவு தெரு முழுவதும் ஆக்கிரமித்து கொள்வதால், நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அனுப்பியும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com