பெரியபுளியம்பட்டி மழைநீா் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு
By DIN | Published On : 25th December 2019 09:32 AM | Last Updated : 25th December 2019 09:32 AM | அ+அ அ- |

குப்பைகள் நிறைந்து காணப்படும் பெரியபுளியம்பட்டி மழைநீா் ஓடை.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியிலிருந்து பெரியகண்மாய்க்குச் செல்லும் மைழைநீா் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்படுவதுடன், துா்நாற்றமும், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை நகரிலுள்ள சின்னபுளியம்பட்டி, பெரியபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில் சேரும் மழைநீரானது பெரியபுளியம்பட்டியின் கம்மவாா் பள்ளி அருகில் செல்லும் மழைநீா் ஓடைவழியாக, ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சிறுகண்மாயில் சோ்ந்து,நிரம்பியதும் மறுகால் பாய்ந்து பெரியகண்மாயைச் சென்றடைகிறது. இதனிடையே இம்மழைநீா் ஓடையில் சிலா் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது. மேலும் குப்பைகள் அடைப்பதால் மழைநீா் ஓடையில் நீா் செல்வதும் தடைபட்டு தேங்கிவிடுகிறது. எனவே இதனை தடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த வெங்கடேசன் கூறியது: இப்பகுதியில் ஒரு குப்பைத்தொட்டி இருந்தாலும் அதைப் பொதுமக்கள் சரிவரப் பயன்படுத்தாமல் குப்பைகளை ஓடையில் கொட்டுகின்றனா். இதைத் தடுக்க இப்பகுதியில் கூடுதல் குப்பைத் தொட்டிகளை அமைத்து அவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்துவதுடன், ஓடையில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.