சுடச்சுட

  

  ஊர், இனச்சுழற்சி விவரங்கள் தெரியாததால் அங்கன்வாடிப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அவதி

  By DIN  |   Published on : 13th February 2019 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் அங்கன்வாடி காலிப் பணியிட ஊர் உள்ளிட்ட  பல்வேறு விவரங்கள் தெரியாததால் விண்ணப்பதாரர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
   விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதில், முதன்மை அங்கன்வாடி மையப் பணியாளர், குறு அங்கன்வாடி மையப் பணியாளர், உதவியாளர் என மொத்தம் 185 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. 
  இப்பணியிடங்கள் பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) என இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.  விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
  அதேபோல், விண்ணப்பதாரர்கள் காலிப் பணியிடம் உள்ள ஊரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த ஊராட்சியிலோ, 10 கி.மீ சுற்றளவிலோ வசிக்க வேண்டும் என அறிவித்தனர். ஆனால், எந்தெந்த ஊரில் இன சுழற்சி அடிப்படையில் காலிப் பணியிடங்கள் உள்ளது என்ற விபரம் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும், ஒன்றிய அளவில் காலிப் பணியிட விவரம் ஒட்டப்படவும் இல்லை.
  இதனால், விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிப்பது என செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும், விண்ணப்பம் வழங்குவதற்கு மிக குறைவான நாள்களே உள்ளதால், பலர் ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன் றிய அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைந்து வருகின்றனர். எனவே, அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் காலிப்பணியிடம் குறித்த ஊர் பெயர், பதவியின் பெயர், இனசுழற்சி முறையை ஒட்டி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai