சுடச்சுட

  

  சாத்தூரில் பசுமை உரக்குடில் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

  By DIN  |   Published on : 13th February 2019 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூர் நகராட்சி சார்பில் அமைக்க இருந்த நுண்ணுயிர் பசுமை உரக்குடில் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள், பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி வார்டு எண் 1இல் நகராட்சி சார்பில் பூங்கா அமைப்பதாகக் கூறி, குடியிருப்பு அருகில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் தூய்மை இந்தியா திட்டத்தில் நுண்ணுயிர் பசுமை உரக்குடில் அமைக்கும் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  இதையடுத்து இப்பகுதி மக்கள், அங்கு வந்த நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு நுண்ணுயிர் பசுமை உரக்குடில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் குடியிருப்பு பகுதியில் உரக்குடில் அமைக்கக் கூடாது என நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.
  இதையடுத்து இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை சமாதானக் கூட்டம் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து தலைமை வகித்தார்.
  வட்டாட்சியர் ராமநாதன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  இதில் 1ஆவது வார்டு பொதுமக்கள் மற்றும் தமாகா நகரத் தலைவர் அய்யப்பன், நாம் தமிழர் கட்சி நகரச் செயலாளர் முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பசுமை உரக்குடில் திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பசுமை உரக்குடில் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் முறையான ஆலோசனைக்கு பின்னர் குடியிருப்பு பகுதியில், பசுமை உரக்குடில் அமைப்பதா அல்லது வேறு இடம் தேர்வு செய்வதா என முடிவு செய்யபடும் என தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai