ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில்  ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் தாமதம் அடைவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில்  ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் தாமதம் அடைவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் லட்சுமியாபுரம்-காமராஜர் நகர் இடையே உள்ள ரயில்வே கடவுப் பாதையை, சுரங்கப்பாதையாக மாற்றும் பணி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.  இப்பணிகளை முடிக்க ரயில்வே நிர்வாகம் தாமதித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
இப்பணிகள் காரணமாக லட்சுமியாபுரம் கிராம மக்கள் மயானத்திற்கு செல்ல வழியின்றி தவிக்கின்றனர். 
மேலும் இப்பகுதியில் காமராஜர் நகர், இடையபொட்டல்பட்டி, அருந்ததியர் காலனி, காளீஸ்வரி காலனி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பாலசுப்பிரமணியாபுரம், துலுக்கன்குளம், கங்கா குளம், கண்ணார்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. 
இந்த கிராமங்களுக்கு மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்நிலையில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மற்றும் நீர்த்தொட்டிகளும் சுரங்கப்பாதைப் பணிகளால் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சில கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது. 
மேலும் மாற்றுப்பாதை அமைக்காததால் இப்பகுதிக்கு அரசுப் பேருந்துகள் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணி 95 சதவீத பணி முடிவடைந்துள்ளது. 
ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. எனவே, எஞ்சியுள்ள  சுரங்கப்பாதை பணிகளை முடித்து, அரசுப் பேருந்துகளை இயக்கவும், குழாய்களை சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com