முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
கடம்பன்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்
By DIN | Published On : 28th February 2019 08:00 AM | Last Updated : 28th February 2019 08:00 AM | அ+அ அ- |

விருதுநகர் வட்டம் கடம்பன்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித் தொகை, 5 பயனாளிகளுக்கு ரூ.1,12,500 மதிப்பிலான இயற்கை மரணம் மற்றும் ஈமக்கிரியை உதவித் தொகைக்கான காசோலை, 62 பயனாளிகளுக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, வேளாண்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.5,900 மதிப்பிலான வேளாண் இடு பொருள்கள், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் அரசுத் திட்டங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை பழுது நீக்கம் செய்வதற்கு 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலைகள் என மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.6,22,400 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: அரசின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகைகள் ஆதரவற்றோர்கள், முதியோர்கள், ஏழை எளிய மக்களுக்காகத் தான் வழங்கப்படுகிறது. வசதியானவர்களுக்கு இல்லை. உழைக்கும் மகளிருக்கு இரு சக்கரம் வாகனம் வழங்கும் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் மானிய விலையிலான இரு சக்கர வாகனங்களை வழங்கி தமிழகத்திலேயே முதல் மாவட்டம் என்ற நிலையை அடைந்துள்ளோம். மேலும், நிகழாண்டிற்கு உரிய மனுக்கள் பெறப்பட்டு வருகிறது என்றார்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லட்சுமிப்பிரியா, விருதுநகர் வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.