முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
நிலத்தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயி கொலை: 2 பேர் கைது
By DIN | Published On : 28th February 2019 08:02 AM | Last Updated : 28th February 2019 08:02 AM | அ+அ அ- |

திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டி அருகே நிலத்தகராறில் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமிக்கும், இவரது விவசாய நிலத்தை ஒட்டி உள்ள மற்றொரு விவசாய நிலத்திற்குச் சொந்தமான கண்ணன் என்பவருக்கும் அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனிடையே அழகர்சாமி கடந்த திங்கள்கிழமை தனது நிலத்திலிருந்து புற்களைப் பிடுங்கி அவற்றுக்குத் தீவைத்த போது அருகிலிருந்த விவசாயி கண்ணனின் நிலத்துக்கும் தீ பரவியதாம்.
இதைக் கண்ணன் தட்டிக் கேட்ட போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இத்தகராறு பற்றி அழகர்சாமி தனது பேரனான தமிழரசனிடம் கூறினாராம். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கண்ணனிடம், தமிழரசன் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த தமிழரசன், கண்ணனை உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டுத் தப்பியோடி விட்டாராம்.
பின்னர் கண்ணனை நீண்ட நேரம் காணாது அவரது தாயார் சீதாலட்சுமி வயல்வெளிக்குச் சென்று தேடியபோது அங்கு கண்ணன் தலையில் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக கண்ணனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ம.ரெட்டியபட்டி போலீஸார் புதன்கிழமை அழகர்சாமி மற்றும் அவரது பேரன் தமிழரசன் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.