முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகரில் வரி செலுத்தாத 122 கடை, வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ்
By DIN | Published On : 28th February 2019 07:59 AM | Last Updated : 28th February 2019 07:59 AM | அ+அ அ- |

விருதுநகர் நகராட்சிப் பகுதியில் உள்ள கடை, வீடுகளுக்கு முறையாக வரி செலுத்தாத 122 பேருக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி புதன்கிழமை தெரிவித்தார்.
விருதுநகர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் வீடுகள் மற்றும் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை வரி உள்பட பல்வேறு வரிகளை பலர் கட்டவில்லை. இதனால், பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சார்பில் நகராட்சிக்கு ரூ. 13 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு மாதமும் நகராட்சியில் பணி புரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் விருதுநகர் நகராட்சி ஆணையராக பதவி ஏற்ற பார்த்தசாரதி, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூல் செய்ய 9 குழுக்களை நியமித்தார். இவர்கள், தினமும் ரூ. 5 லட்சம் வரி வசூல் செய்ய வேண்டும் என இலக்கும் நிர்ணயித்தார். இதைத் தொடர்ந்து தற்போது வரை ரூ. 1.75 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரி செலுத்தாதவர்களுக்கு முறைப்படி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதிக வரி செலுத்தாத சில இடங்களில் பாதாளச் சாக்கடை இணைப்பையும் துண்டித்துள்ளனர். அதேபோல், நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத 122 வீடுகள், கடைகளுக்கு ஜப்தி நோட்டீஸ் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
மார்ச் இறுதிக்குள் வரி பாக்கி அனைத்தும் வசூல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தெரிவித்தார்.