"மாணவர்கள் விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்'
By DIN | Published On : 28th February 2019 08:01 AM | Last Updated : 28th February 2019 08:01 AM | அ+அ அ- |

மாணவர்கள் விளையாட்டில் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் தலைமை தேசிய பேட் மிட்டன் பயிற்சியாளர் எம்.எஸ்.ஆரிஃப் தெரிவித்தார்.
திருத்தங்கலில் உள்ள ஹட்சன் பேட்மிட்டன் சென்டரில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாணவர்களுக்கு இறகுப் பந்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் தலைமை தேசிய பேட் மிட்டன் பயிற்சியாளர் எம்.எஸ்.ஆரிஃப், இறகுப் பந்து விளையாட்டு பயிற்சி அளித்து பேசியதாவது: எந்த ஒரு விளையாட்டிலும் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஆர்வம் வேண்டும். எனவே இறகுப் பந்து பயிற்சியை நீங்கள் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டால் இலகுவாக வெற்றி பெறலாம். பெற்றோர்களின் நிர்ப்பந்தத்துக்காக எந்த ஒரு விளையாட்டையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு முழு விருப்பம் வேண்டும். விளையாட்டின் போது, எதிராளி நம்மைவிட பலமானவராக இருப்பாரோ என நினைக்கக் கூடாது. ஆனால் எதிராளியை குறைந்து மதிப்பிடக்கூடாது. மனதில் வெற்றி பெற வேண்டும் என உறுதி வேண்டும். தோல்வி ஏற்பட்டால் , நாம் செய்த தவறுகள் என்னென்ன என பட்டியலிட வேண்டும்.
அடுத்த முறை விளையாடும் போது, அந்தத் தவறுகள் நடைபெறாதவாறு கவனமாக இருக்க வேண்டும். வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜமான ஒன்று. ஆனால் நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.
முன்னதாக பயிற்சி மையத்தின் ஆலோசகர் அஜீத்ஹரிதாஸ் வரவேற்றார். இதற்கான ஏற்பாட்டினை மையத்தின் புரவலர் ஆர்.ஜி.சந்திரமோகன் செய்திருந்தார்.