விருதுநகரில் மார்ச் 6 இல் திமுக தென் மண்டல மாநாடு

விருதுநகர் அருகே திமுக தென் மண்டல மாநாடு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விருதுநகர் அருகே திமுக தென் மண்டல மாநாடு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இரண்டு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என கே.கே.எஸ்.எஸ்.ஆர்.  ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
 விருதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி) ஆகியோர் தலைமை வகித்தனர்.
 இதில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:  மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், மக்களவை தேர்தலுக்கும், 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதை மையமாக வைத்தே விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு மார்ச் 6 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். விருதுநகர் அருகே நான்கு வழிச் சாலையில் துலுக்கப்பட்டிக்கும் ஆட்சியர் அலுவலகத்திற்கும் இடையே திறந்த வெளி தென் மண்டல மாநாடாக இது நடைபெற உள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 3,500 வாகனங்களில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோல், பிற மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 
 கடந்த 2004 இல் விருதுநகரில் திமுக சார்பில் மாநாடு நடத்திய பின்னர் அப்போது நடைபெற்ற தேர்தலில் 40 மக்களவை தேர்தலிலும் நாம் வெற்றி பெற்றோம். இது ராசியான மாதம் என்பதால் தற்போது இங்கு மீண்டும் மாநாடு நடத்த உள்ளோம். மேலும், 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் நாம் வெற்றி பெற்றால் தான், பொது தேர்தலை சந்திக்காமல் திமுக ஆட்சியை அமைக்க முடியும் என்றார்.
 இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (விருதுநகர்), தங்கப்பாண்டியன்(ராஜபாளையம்) மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com