"திருப்பாவையின் 108 பதிகங்களை படித்தால் மாணவர்கள் சிறந்து விளங்கலாம்'

திருப்பாவையின் 108 பதிகங்களை படித்தாலே மாணவர்கள் சிறந்து விளங்க முடியும் என தமிழக லஞ்ச ஒழிப்பு

திருப்பாவையின் 108 பதிகங்களை படித்தாலே மாணவர்கள் சிறந்து விளங்க முடியும் என தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இணை இயக்குநர் எஸ்.முருகன் தெரிவித்தார். கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் இரண்டாம் நாள் பாவை விழா வெள்ளிக்கிழமை கல்வி நிறுவனத் தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. 
தாளாளர் பழனிச்செல்வி சங்கர், துணைத் தலைவர் தங்கபிரபு ஆகியோர் முன்னிலை வகித்ததனர். தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இணை இயக்குநர் எஸ்.முருகன் விழாவில் கலந்து கொண்டு திருப்பாவை அழகும் அமைப்பும் என்ற தலைப்பில் பேசியதாவது: பாரதியார் மற்றும் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தம் பாடல் வரிகளை திருப்பாவையில் இருந்து எடுத்துதான் எழுதியுள்ளனர் திருப்பாவையின் 108 பதிகங்களை படித்தால் போதும், இக்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். ஆகையால் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு திருப்பாவையினை கற்றுத்தர வேண்டும். மேலும் ஜோதிடம், ஆன்மிகம், மருத்துவம் அனைத்துமே திருப்பாவையில் இடம் பெற்றுள்ளது என்றார். 
கவிஞர்.ஆண்டாள் பிரியதர்சினி ஆண்டாள் என்னும் பேரழகு என்ற தலைப்பில் பேசியது: ஆண்டாளை பேரழகு என்று கூறுவது அவர்களின் வெளித்தோற்றத்தை அல்ல. ஆண்டாளின் மன உறுதியினைத் தான் பேரழகு என்று மாணவிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 
ஆண்டாள் தன் மனதில் நாராயணனை நினைத்து உறுதியாக தான் நினைத்ததை சாதித்தது போல், மாணவிகள் தனக்கென்று ஓர் உறுதியை மேற்கொண்டு தம் பெற்றோர்களை பெருமைப்படுத்த வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த ரிக்ஷா தொழிலாளியின் மகள் ஹீமா தாஸ். இவர் தன் மனதில் குடும்பத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்தது தான் பேரழகு. அதனைத்தான் ஆண்டாள் திருப்பாவையில் எடுத்துரைக்கிறார் என்றார்.
 அதனைத் தொடர்ந்து பேராசிரியர் எம்.ராமச்சந்திரனா குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் "மனிதகுல மகிழ்ச்சியைப் பெரிதும் தீர்மானிப்பது அறிவியலா?.. ஆன்மிகமா?..." என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் அறிவியலே என்ற தலைப்பில் டாக்டர்.செளந்தர மகாதேவன் மற்றும் இசை ஆசிரியர் உமாசங்கர் ஆகியோர் பேசினர். ஆன்மிகமே என்ற தலைப்பில் ஆசிரியர் இந்திரா ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியர் மலர்விழி ஆகியோர் பேசினார்.
இதையடுத்து நடுவர், மனிதகுல மகிழ்ச்சியைப் பெரிதும் தீர்மானிப்பது ஆன்மிகமே என்று தீர்ப்பு வழங்கினார். முன்னதாக மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பா.பிரபாகரன் வரவேற்றார்.
இதையடுத்து வி.பி.எம்.எம்.கல்வி நிறுவன மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெகன்,  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.சம்பத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி இயக்குநர் டாக்டர் ரா.சபரிமாலா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com