குழந்தைகளின் படிப்பைப் போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்'

பெற்றோர் தங்களின் குழந்தைகளின் படிப்புக்கு தரும் முக்கியத்துவம் போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம்


பெற்றோர் தங்களின் குழந்தைகளின் படிப்புக்கு தரும் முக்கியத்துவம் போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என தமிழக ஹாக்கி அணியின் பயிற்சியாளர் முத்துக்குமார் கூறினார்.
ராஜபாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிராமப்புறம் மற்றும் ஊரக பள்ளிகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் இனம் கண்டு அரசு விளையாட்டு விடுதிகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் திறமையான பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 
சில உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களின் தேவைகளுக்காக மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியே அனுப்புவதில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். மாநில அளவிலான அணிகளுக்கு ஆண்டுதோறும் பயிற்சியாளர் மாற்றப்படுகிறார். பயிற்சியாளர் குறைந்தபட்சம் 4 வருடங்கள் ஒரே அணியில் இருந்து பணியாற்றினால் மட்டுமே வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கும்.
கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு மட்டை, ஒரு பந்து இருந்தாலே 11 பேர் விளையாட முடியும். ஆனால் ஹாக்கியில் களத்தில் விளையாடும் 11 பேருக்கும் தேவையான பொருள்களை தனித் தனியாக வாங்க வேண்டும். 
பொருள் செலவு அதிகமாகும் என்பதால் பல பள்ளிகளில் ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலக அளவில் அனைத்து துறைகளிலும் உள்ள அரசியல் உள்ளது. விளையாட்டு துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 
அந்த அரசியல் தடைகளை மீறி விளையாட்டு வீரர்கள் முன்னேறி வர வேண்டும். மாணவர்கள் தற்போதுள்ள சூழலில் கெட்டப் பழக்கங்களுக்கும், சினிமா, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றில் அடிமையாகாமல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படிப்புக்கு தரும் முக்கியத்துவம்போல், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com