ராஜபாளையம் அருகே பழங்குடியினருக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ராஜபாளையத்தில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மலை வாழ் மக்களுடன் புதன்கிழமை நடைபெற்ற கலை

ராஜபாளையத்தில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மலை வாழ் மக்களுடன் புதன்கிழமை நடைபெற்ற கலை பொங்கல் விழாவில் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுடன் கொண்டாடப்பட்ட கலைப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 
மேலும் 7 துணை ஆட்சியர்கள், 3 கோட்டாட்சியர்கள், 40 வட்டாட்சியர்கள், 25 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்துறை உயர் அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் கோ பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப் பட்டது.
பின்னர் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நடத்திய பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், பாட்டுக்கு பாட்டு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழக நொறுக்கு தீனிகள் மற்றும் இனிப்பு வகைகள் குறித்த கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தது.
கலை நிகழ்ச்சிக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர், அறிவு தொடர்பான போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் முடிவில் 30 பழங்குடியினர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கரும்பு, அரிசி மூடைகளுடன் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள், பாய் தலையணை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருள்களை ஆட்சியர் அ.சிவஞானம், காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் வழங்கினர்.
மேலும் 37 நபர்களுக்கு 
பழங்குடியின மக்களுக்கான ஜாதி சான்றிதழ்களும் வழங்கப் பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com