சிவகாசியில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st July 2019 02:09 AM | Last Updated : 01st July 2019 02:09 AM | அ+அ அ- |

சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் நாளுக்கு நாள் இருசக்கர வாகன எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை உள்ளது. எனினும் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பலர் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.
இவர்களுக்கு முறையான போக்குவரத்து விதிகள் தெரியாது. இதனால் சாலையில் திரும்பும்போதும், சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தும் போதும், எந்த வித சைகையும் காண்பிப்பதில்லை.
மேலும் வாகனத்தில் உள்ள இடது, வலது சைகை விளக்குகளையும் பயன்படுத்துவதில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
18 வயது நிரம்பாத பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் வரக் கூடாது என பள்ளி நிர்வாகங்கள் உத்தரவிட வேண்டும். ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இவற்றைக் கண்டு கொள்வதில்லை.
எனவே, இதனை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.