சுடச்சுட

  

  சிவகாசி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்

  By DIN  |   Published on : 02nd July 2019 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
  தமிழக அரசு கடந்த ஜனவரி முதல் ஒருமுறை  பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பை உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்தது. தொடந்து சிவகாசி நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.3.25 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தது. இந்நிதியில் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்க 41 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், இந்த வாகனங்கள் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும். வீடுகளில் நெகிழி, மரக்கட்டை உள்ளிட்ட மக்காத குப்பைகள் தனியே வைக்க வேண்டும். பேட்டரி வாகனத்தில் வாரத்தில் ஒருநாள் புதன்கிழமை மக்காத குப்பையை வாங்க வேண்டும் என்பதே இத்திட்டமாகும். இந்நிலையில் பேட்டரி வாகனங்களில் ஊதா வண்ணத்திலும், பச்சை வண்ணத்திலும் தலா இரு பேரல்கள் வைக்கப்பட்டுள்ளன.
  இதில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து வாங்கப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது பேட்டரி வாகனங்களில் வீடுவீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 20 சதவீதம் மக்களே வீடுகளில் நெகிழிக் கழிவுகளை தனியே வைத்து வழங்குவதாகவும், மற்றவர்கள் வழக்கம் போல அனைத்தையும் ஒன்றாகப் போட்டு விடுவதாகவும் துப்புரவு பணியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் கடை வீதிகளில் உள்ள கடைக்காரர்கள் நெகிழிக்கழிவுகளை தனியே பிரித்து வைப்பதில்லை. அவர்கள் வழக்கம் போல குப்பை கொட்டும் இடத்தில் அனைத்து குப்பைகளையும் கொட்டி வருகிறார்கள். இதனால் நகராட்சி நிர்வாகம் வழக்கம்போல குப்பையை மொத்தமாக சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
  எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நகராட்சி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் கூறியதாவது: நெகிழியை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம். ஆனால் பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு இல்லாதது வருத்தத்துக்குரியது. இந்த சுகாதாரத் திட்டத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான், அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். எந்த ஒரு திட்டத்திற்கும் ஒத்துழைப்பு இல்லை அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாடு நகராட்சியையும், நகரையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாது. கேரளா மாநிலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு வீடுகளில் மக்கா குப்பையை பிரித்துக் கொடுக்காவிட்டால் , அந்த வீட்டின் முகப்பில் ஒரு அடையாள ஸ்டிக்கரை ஒட்டி விடுகிறார்கள். அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்படும் வீடுகளில் துப்புரவுப்பணியாளர்கள் குப்பையை வாங்குவதில்லை. இதன் மூலம் அங்கு முழு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்தால் தான் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த இயலும். இல்லையெனில் நகராட்சி நிர்வாகம் வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளிலிருந்து நெகிழிக் கழிவுகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும். அதற்கு பணம் செலவாவதோடு, காலவிரையமும் ஏற்படும். எனவே பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து, குப்பைஇல்லா நகராக மாற்ற வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai