இறவார்பட்டி- ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் தரைப் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th July 2019 09:35 AM | Last Updated : 05th July 2019 09:35 AM | அ+அ அ- |

இறவார்பட்டி- ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இறவார்பட்டியில் இருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் வைப்பாற்றின் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து தான் இறவார்பட்டி, சல்வார்பட்டி, அச்சங்குளம், அன்பின் நகரம், கண்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இப்பகுதியினர் சென்று வந்தனர். இறவார்பட்டி, சல்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், ஏழாயிரம்பண்ணை செல்வதற்கும், அச்சங்குளம், அன்பின்நகரம் பகுதியில் வசிப்பவர்கள் இறவார்பட்டி வழியாக சாத்தூர் வந்து செல்வதற்கும், வைப்பாற்றின் குறுக்கே இந்த தரை பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப் பாலம் அமைக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். பின்னர் வைப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது.
இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இப்பகுதியினர் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பாலம் உடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பாலத்தை சரிசெய்ய வலியுறுத்தி பலமுறை கிராமத்தினர் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே உடைந்த தரைப் பாலத்தை விரைவில் சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராமத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.