சுடச்சுட

  

  தாயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 11th July 2019 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் அருகே தாயில்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  இப்பள்ளி தாயில்பட்டி பிரதான சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது. இப்பள்ளியில் கலைஞர்காலனி, கோட்டையூர், மீனாட்சிபுரம், மடத்துபட்டி, கீழதாயில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
  இந்நிலையில் இப் பள்ளியின் பாதுகாப்புக்காக பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் நுழைவாயில் அருகே வேன்கள் நிறுத்தும் இடமும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்து இடிந்து விழுந்தது. 
  ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் இச் சுவரை சரிசெய்ய தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இரவு, பகல் நேரங்களில் சுற்றுசுவர் சேதமடைந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் சட்ட விரோத மதுக்கூடமாகவும் இது இயங்கி வருகிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் சுற்றுசுவர் சேதமடைந்துள்ள பகுதியின் அருகே தான் மாணவிகளின் கழிப்பறையும் உள்ளது. இதனால், மாணவிகள் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாமல் மிகுந்த அச்சமும் அவதியும் அடைந்து வருகின்றனர். எனவே மாணவிகள் நலன் கருதி பள்ளியின் சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும் என மாணவ, மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai