சுடச்சுட

    

    முன்விரோத தகராறில் விவசாயி கொலை:  குற்றவாளிகள் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 11th July 2019 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், எம். ரெட்டியபட்டி அருகே உள்ள கல்யாணசுந்தரபுரத்தில் முன் விரோதத் தகராறில் விவசாயி கொல்லப்பட்ட வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
    கல்யாணசுந்தரபுரத்தைச் சேர்ந்த தாவீது மகன் ராஜமாணிக்கம் (77). இவர், இங்குள்ள காளியம்மன் கோயில் பொது இடத்தை பயன்படுத்தி வருவதாக இதே ஊரைச் சேர்ந்த பொன்னையா மகன் மைக்கேல் (67) என்பவர் வருவாய்த் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தாராம். இதனால், இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. 
    இந்நிலையில் மைக்கேல், தனது மகன் சாமுவேலுடன் (22) விவசாய நிலத்திற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 21 இல் சென்றுள்ளார். அப்போது, அவரை வழி மறித்த ராஜமாணிக்கம் மற்றும் அவரது மகன்களான மரியராஜ், ஏசுராஜ் என்ற ஏசுதாஸ், உறவினர் ஸ்டீபன் ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் மைக்கேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரது மகன் சாமுவேல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற் றார். இவரது புகாரின் பேரில் ராஜமாணிக்கம், அவரது மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது எம். ரெட்டியபட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். 
    இந்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நீதிபதி பரிமளா முன்னிலையில் இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
    இதில், ராஜமாணிக்கத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அவரது மகன்களான மரியராஜ்(51), ஏசுராஜ் என்ற ஏசுதாஸ் (39) மற்றும் உறவினர் ஸ்டீபன் (46) ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி  உத்தரவிட்டார். 
    இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai