விருதுநகர் மாவட்டத்தில் முழு மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் முழு மானியத்துடன் 400 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.4 கோடி

விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் முழு மானியத்துடன் 400 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வேளாண் பொறியியல் செயற் பொறியாளர் (பொ) சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 இது குறித்து அவர் வியாழக்கிழமை கூறியது: 
விருதுநகர் மாவட்டத்தில் 400 பண்ணைக் குட்டைகள் முழு மானியத்துடன் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 சென்ட் பரப்பளவில் 30 மீட்டர் (100 அடி) நீளம், 30 மீட்டர் (100 அடி) அகலம், 2 மீட்டர் (6.6அடி) ஆழத்துடன் பண்ணைக்குட்டை அமைக்க ரூ. ஒரு கோடி முழு மானியம் வழங்கப்படுகிறது. 
இதன் மூலம் சுமார் 18 லட்சம் லிட்டர் அல்லது 63, 500 கன அடி நீர் சேமிக்கப்படுகிறது. இந்த நீரினைக் கொண்டு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் 5 ஏக்கர் பரப்பிலான பயிருக்கு பாசனம் செய்யலாம். 
மேலும் பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளர்ப்பதன் மூலம் கூடுதல் வருமானமும் பெறலாம். பண்ணைக்குட்டை அமைப்பதற்கு, நீளம் மற்றும் அகலத்தினை 20 மீட்டருக்கு குறைவில்லாது விவசாய நிலங்களுக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 
எனவே, இத்திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல்  துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை (04562 252192) தொடர்பு கொள்ளலாம். அல்லது விருதுநகர், அருப்புக் கோட்டை , காரியாபட்டி , நரிக்குடி, திருச்சுழி வட்டார விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர்அலுவலகத்தையும் (9842676725), ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக் கோட்டை வட்டார விவசாயிகள் கிருஷ்ணன்கோவிலில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையும் (04563 289390) தொடர்பு கொள்ளலாம். 
பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் பட்டா, அடங்கல் மற்றும் புல வரைபடத்துடன், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com