சுடச்சுட

  

  சாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு: பொதுமக்கள் அவதி

  By DIN  |   Published on : 13th July 2019 11:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூரில் உள்ள வடக்கு ரத வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள வடக்கு ரத வீதியில் தனியார் திருமண மண்டபம் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள், அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இந்த வழியாக தான் அம்மா உணவகம், சந்தை, திரையரங்கு, சிவன் கோயில், பெருமாள் கோயில், காளியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். 
  இந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் செல்லும் அளவிற்கு பாதை இருந்தாலும், சாலையின் பெரும் பகுதியை அனைத்து கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். 
  இதுதவிர ஏராளமான ஆட்டோக்களும் சாலையோரமாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நகராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
  மேலும் அவசர தேவைக்காக இவ்வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
  இந்த சாலையில் தான் சாத்தூர் பெருமாள் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும் நடைபெறும்.  தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் மட்டும் நகராட்சி அதிகாரிகள் பெயரளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். 
  இதுதவிர பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தும் முக்கிய இடமாகவும், வடக்கு ரதவீதி உள்ளது. இதுபோன்ற நேரங்களில் அதிகளவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு விபத்துகளும் இந்த பகுதியில் நடைபெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி வடக்கு ரத வீதியில் நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai