நாகலாபுரம் கண்மாய், அய்யம்பட்டி கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள்

சாத்தூர் அருகே நாகலாபுரம் முடித்தலை கண்மாய், அய்யம்பட்டி கண்மாய்களின்  குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

சாத்தூர் அருகே நாகலாபுரம் முடித்தலை கண்மாய், அய்யம்பட்டி கண்மாய்களின்  குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மு.நாகலாபுரம் கிராமத்திலுள்ள முடித்தலை கண்மாய் ரூ.27.60 லட்சம் மதிப்பிலும்,  அய்யம்பட்டி கண்மாய் ரூ.37.50 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியது: இத்திட்டத்தில் கண்மாய்களின் கரைகள் பலப்படுத்துதல், மடைகளை பழுது பார்த்தல் மற்றும் மறுகட்டுமானம், கலுங்குகள் பழுதுபார்த்தல், வரத்துக்கல்வாய்கள் தூர்வாருதல், நில அளவை செய்து கண்மாய்களில் எல்லைக் கற்களை நடுதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணிகளை தரமான முறையிலும், நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில், மழைநீரை  சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் நடைபெற வேண்டும். இப்பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து தொடங்கி பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு நிர்ணயிக்கபட்ட காலகட்டத்திற்குள் தொய்வின்றி முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்றார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளுக்கு தேர்வு செய்யபட்டுள்ள 65 கண்மாய்கள் தவிர இதர கண்மாய்கள் துர்வாரும் பணியில் விருப்பமுள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று பணிகளில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கபட்டிருந்தது.
இதன்படி தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வெம்பக்கோட்டை வட்டம், கீழராஜகுலராமன் கிராமத்திலுள்ள கடம்பன்குளம் கண்மாயில் நடைபெற உள்ள குடிமராமத்துப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர்  தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து, துணை ஆட்சியர்
(பயிற்சி) சரஸ்வதி உள்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள், விவசாயிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் ஓடைகுளம் கண்மாய் அமைந்துள்ளது. 58 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் 110 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சேத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தென்னை, நெல் மற்றும் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இந்த கண்மாய் கரை பலமிழந்து உள்ளதால், குடி மராமத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் ஓடை குளம் உள்ளிட்ட 9 கண்மாய்களை மறு சீரமைப்பு செய்ய அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக ஓடை குளம் கண்மாயில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து பணிகளைத்  தொடக்கி வைத்தார்.
உடன் செயற்பொறியாளர் ராஜா, சமூக நலத்துறை வட்டாட்சியர் ராம்தாஸ், உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி, உதவி பொறியாளர்கள் சந்திரமோகன் மற்றும் புனிதலட்சுமி ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com