சிவகாசி: வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க மக்கள் ஆர்வம்

சிவகாசியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தொடர்ந்து தங்களது வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


சிவகாசியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தொடர்ந்து தங்களது வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
 சிவகாசியில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 600 அடிக்கும் கீழ் போய்விட்டது. நகராட்சி சார்பில் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் 90 சதவீத கிணறுகளில் தண்ணீர் இல்லை.
இதனால் மக்கள் உப்புத்தண்ணீரை கூட குடம் ரூ.4-க்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  
சிவகாசிக்கு நிலத்தடி நீராதாரமாக உள்ள பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் முற்றிலும் வறண்டு விட்டன. இனி வரும் காலங்களில் மழை நீரை சேமித்தால் தான் தண்ணீர் பிரச்னையை ஓரளவுக்கு தீர்க்க இயலும் என சிவகாசி மக்கள் விழிப்படைந்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேமிப்புதிட்டத்தை கொண்டு வந்தபோது, சிவகாசிப் பகுதியில் சுமார் 5 சதவிகிதத்தினர் தங்களது வீடுகளில் மழைநீர் சேமிப்பை அமைத்தனர்.
 தற்போது மழைநீரை அப்படியே பயன்படுத்துவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சுமார் 25 சதவிகிதம் பேர் தங்களது வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி விட்டனர்.
இதுகுறித்து வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டி.கிரிதரன் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முதலில் மழைநீர் வடி தொட்டி அமைக்க வேண்டும். சிமென்டிலான தொட்டியில், மழைநீர் துளிதுளியாக விழும்படி துளையிட்ட குழாயை வைத்து, அதன் கீழ் இரும்பாலான சல்லடைஅமைத்து பின்னர் அதன் மேற்பரப்பில் முதலில் கொசுவலை விரித்து, அதில் சிரட்டை கரியை நிரப்ப வேண்டும். இந்த கரி தண்ணீரில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றிவிடும். இதையடுத்து கொசுவலை அமைத்து அதில் அவல் ஜல்லி(பேபி ஜல்லி) கற்களை போட வேண்டும். பின்னர் அதன் மீது கொசுவலை விரித்து, ஆற்று மணலை பரப்ப வேண்டும்.  மொட்டை மாடியிலுருந்து தண்ணீர் வரும் குழாயை இதில் பொருத்த வேண்டும். அந்த குழாயில் பல இடங்களில் துளையிட்டு விட்டால், தண்ணீர் சீராக வரும். பின்னர் மழைநீர் சேகரிக்கும் தொட்டிக்கு செல்லும். மினி மோட்டார் மூலம் சேகரிக்கப்பட்ட தண்ணீரை அப்படியே பயன்படுத்தலாம். இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கு பொதுமக்களிடையே  நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com