மதுரை- செங்கோட்டை 4 வழிச்சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க நடவடிக்கை: தனுஷ் எம்.குமார் எம்.பி. பேட்டி

 மதுரை- செங்கோட்டை 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தனுஷ் எம்.குமார் எம்.பி. தெரிவித்தார்.


 மதுரை- செங்கோட்டை 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தனுஷ் எம்.குமார் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தேவையான வசதி மற்றும் ரயில் சேவைகளின் கூடுதல் தேவை குறித்து கருத்து கேட்பு கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தலைமை வகித்தார். இந்த கூட்டத்துக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை -செங்கோட்டை நான்கு வழிச்சாலை அமைக்கும் போது விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் சாலை அமைக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து வரும் ஆக.1 ஆம் தேதி மதுரையில் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்திற்கு வந்திருந்த ரயில் பயணிகள் சங்கத்தினரும் மற்றும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்களும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். 
குறிப்பாக ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் தற்காலிக கார் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். தென்காசியில் இருந்து ராஜபாளையம் வழியே கோவைக்கு புதிய ரயில் விட வேண்டும். ராஜபாளையம்- சங்கரன்கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே கரிவலம் வந்த நல்லூரில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். வாரம் 3 தினங்கள் இயங்கும் சிலம்பு விரைவு ரயிலை, 24 பெட்டிகளுடன் தினம் இயக்க வேண்டும். மதுரையில் இருந்து புறப்படும் வைகை மற்றும் தேஜஸ் ரயில்களை இணைக்கும் வகையில் தென்காசியில் இருந்து கூடுதல் ரயில் விட வேண்டும். செங்கோட்டை- பெங்களூருக்கு அதிவிரைவு ரயில் மற்றும் கேரளாவுக்கு சரக்கு கொண்டு செல்ல கொல்லம் விரைவு ரயிலில் சரக்கு பெட்டிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற மக்களவையில் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தனுஷ் எம்.குமார் எம்பி. தெரிவித்தார்.
 கூட்டத்தில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com