முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: திருமணமானவருக்கு 7 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 30th July 2019 08:55 AM | Last Updated : 30th July 2019 08:55 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, திருமணமானவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள புலிப்பாறைபட்டியைச் சேர்ந்தவர் பரமன் (40). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அப்பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான திருமணமாகாத இளம்பெண்ணுக்கும், பரமனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2006 இல் பரமன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பரமனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை அடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட பரமனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி காயத்திரி தீர்ப்பளித்தார். அதன்பேரில், போலீஸார் பரமனை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.