முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
By DIN | Published On : 30th July 2019 08:57 AM | Last Updated : 30th July 2019 08:57 AM | அ+அ அ- |

வீரார்பட்டி ஊராட்சிக்குள்பட்ட துரைச்சாமிபுரத்தில் சாலை, குடிநீர் மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என, அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம், அப்பயநாயக்கன்பட்டி அருகே வீரார்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் துரைச்சாமிபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள இந்திரா காலனியில் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மழைக் காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புப் பகுதியில் புகுந்து தேங்குகிறது. அதில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைந்து விடுவதால், குழந்தைகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும், தினமும் 3 குடம் குடிநீரே வழங்கப்படுகிறது. இதன் மூலம், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, தினமும் ஒரு மணி நேரமாவது குடிநீர் விநியோகிக்க வேண்டும். கிராமத்தில் செம்மண் பரப்பப்பட்டுள்ளதோடு சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்டதால், மழைக்கு செம்மண் கரைந்து ஜல்லிக்கற்கள் மட்டுமே உள்ளன. மேலும், தெரு விளக்கு மற்றும் வாருகால் வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, எங்களது குடியிருப்புப் பகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.