சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம்: தமிழக அரசின் மேல்முறையீடு கண்டிக்கத்தக்கது

சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்

சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என, அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 
      விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றக் கூடிய நாடு. அந்த கொள்கை காக்கப்பட வேண்டும்.  அதற்கு எதிராக பாஜக செயல்படுவது நாட்டை சீர்குலைத்துவிடும் என எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.
      தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இன்னும் சில மாதங்களோ, சில காலங்களோ நீடிப்பதற்கு இந்த இடைத்தேர்தல் வழிவகை செய்துள்ளது. ஆனால், இது நிரந்தரம் அல்ல.    சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இது கடுமையான கண்டனத்துக்குரியது.
     இந்த 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து, 5 மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் போராடினர். அவர்கள் மீது, மாநில அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு, காவல் துறையினர் தடியடி நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     அதேபோல், விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, காவல் துறையின் துணையோடு வருவாய்த் துறை அதிகாரிகளைக் கொண்டு கல்  ஊன்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நில அபகரிப்பைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், 8 வார காலத்துக்குள் நிலங்கள் அனைத்தையும் விவசாயிகளிடம்  ஒப்படைக்க வேண்டும் என்றும், 8 வழிச் சாலை அமைக்கக் கூடாது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.      தேர்தலுக்கு முன் அமைதி காத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறிய முதல்வர், தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்றார்.
     பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர் பொ. லிங்கம்,  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான தி. ராமசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com