வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாததால் ஆய்வுப் பணிகள் தேக்கம்

சிவகாசியில் உள்ள மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலக அதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாததால்,  பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

சிவகாசியில் உள்ள மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலக அதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாததால்,  பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 206 பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சான்று பெற்று இயங்கி வருகின்றன. மற்ற ஆலைகள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் சான்று பெற்று செயல்பட்டு வருகின்றன. 
சிவகாசியில் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில், ஒரு துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் 4 வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளனர். மேலும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரின் அனுமதி பெற்ற ஆயிரக்கணக்கான பட்டாசு கடைகளும் உள்ளன.
அதிகாரிகள் பட்டாசு கடைகளுக்கும், பட்டாசு ஆலைகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய மத்திய அரசு வாகன வசதி செய்து கொடுக்கவில்லை.
பட்டாசு ஆலைகளில் உரிமம் பெற்று வைத்துள்ள மருந்துகளின் அளவு, பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விபத்துகளைத் தவிர்க்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.
பட்டாசு கடைகளில் உரிமம் பெற்றுள்ள அளவினை விட கூடுதலாக பட்டாசு வைத்திருக்கிறார்களா என்றும் தீத்தடுப்பு சாதனங்கள் இருக்கிறதா என அதிகாரிகள் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். 
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைத் தொழில் இருக்கிறது. எனினும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினருக்கு வாகன வசதியை மத்திய அரசு இதுவரை செய்து கொடுக்காததால் ஆய்வுப் பணி தேக்க நிலையிலே உள்ளது.
இது குறித்து ஒரு அதிகாரி கூறியது: எங்கள் அலுவலகம் சிவகாசியில் இருக்கிறது. ஆனால் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கடைகளுக்கு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் எங்களுக்கு வாகன வசதி இல்லாததால் , பல நேரங்களில் ஆலை மற்றும் கடைகளுக்கு உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளது. 
இதனால் சொந்த செலவில் வாடகைக் காரில் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் பட்டாசு பிரதானத் தொழிலாக உள்ளது. இதில் விபத்தினை தவிர்க்க அதிகாரிகள் ஆய்வு மற்றும் ஆலைகளுக்கு நேரில் சென்று அறிவுரை கூறுவது என்பது மிகவும் முக்கியமானதாகும். 
எனவே அரசு எங்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தால், பல ஆலைகளுக்கு நேரில் சென்று விபத்தினை பெருமளவு குறைக்க இயலும் என்றார். 
இது குறித்து விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com