நவீன சாயமேற்றும் தொழில்நுட்பத்துடன் காரியாபட்டியில் ரூ.200 கோடியில் புதிய ஜவுளிப் பூங்கா

நூறு சதவீதம் கழிவுகள் வெளியேற்றப்படாமல் "ஜீரோ டிஸ்ஜார்ஜ்' தொழில்நுட்பத்தில் இயங்கும்

நூறு சதவீதம் கழிவுகள் வெளியேற்றப்படாமல் "ஜீரோ டிஸ்ஜார்ஜ்' தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன ஜவுளிப் பூங்கா, மதுரை அருகே காரியாபட்டியில் ரூ.200 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
 தமிழகத்தின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்கள் முக்கிய இடத்தில் இருக்கின்றன. இதற்கு அடுத்ததாக   மதுரை, திண்டுக்கல், விருதுநகர்  மாவட்டங்களில்  பஞ்சாலைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.
 மதுரையைச் சேர்ந்த சாய, சலவை ஆலைகளை நலிவில் இருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன்  மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தின் (மடீட்சியா) வழிகாட்டுதலில் புதிய ஜவுளிப் பூங்கா ரூ.200 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
 தென் மாவட்ட ஜவுளி பிராஸஸிங் கிளஸ்டர் லிமிடெட் என்ற பெயரில் இந்த ஜவுளிப் பூங்கா மதுரையை அடுத்த காரியாபட்டி பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
 இதுகுறித்து இந்த ஜவுளிப் பூங்காவின் திட்ட இயக்குநர் கே.ஆர்.ஞானசம்பந்தன் கூறியது:
 மதுரையில் பஞ்சாலைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், சிறிதும், பெரிதுமாக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு,  சாயமேற்றுதல் உள்ளிட்ட ஜாப் ஒர்க் செய்து கொடுப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  சாயக் கழிவுகள் வெளியேற்றப்படாத (ஜீரோ டிஸ்ஜார்ஜ்) தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.   இதையடுத்து  சென்னை ஐஐடி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலமாக பிராஸஸிங் யூனிட் அமைக்கப்படுகிறது.
  இதன் மூலம் இங்கு ஆலைகளில் வெளியேற்றப்படும் கழிவுகளில் 96 சதவீதம்,  அந்த ஆலைகளின் பயன்பாட்டுக்கே மீண்டும் அளிக்கப்படும். 4 சதவீத கழிவுகள் ஆவியாக்கல் முறையில் வெளியேற்றப்படும். இதனால் நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தபிறகே இத் திட்டத்துக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசின் அனுமதியும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
 இந்த ஜவுளிப் பூங்காவை ரூ.200 கோடியில் அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பாகவும், 25 சதவீதம் தமிழக அரசும்,  25 சதவீதம்  இங்குள்ள நிறுவனங்களின் பங்களிப்பாகவும் இருக்கும்.
  இந்த ஜவுளிப் பூங்காவில் 40 பிராஸஸிங் யூனிட்டுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 36 யூனிட்டுகள் முன்பதிவு செய்திருக்கின்றன. இந்த யூனிட்டுகள் செயல்பட ஆரம்பத்தால், நாட்டிலேயே முன்மாதிரியான தொழில்நுட்ப ஜவுளிப் பூங்காவாக இருக்கும். மேலும் 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றார்.
 இந்த ஜவுளிப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பூமி பூஜையில் இருந்து ஓராண்டுக்குள் இந்த ஜவுளிப் பூங்காவை செயல்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com