விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பொதுமக்கள் குறைகேட்க 3 இடங்களில் அலுவலகம்: மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பொதுமக்கள் குறை கேட்பதற்காக மூன்று இடங்களில் அலுவலகம்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பொதுமக்கள் குறை கேட்பதற்காக மூன்று இடங்களில் அலுவலகம் திறக்கப்படும் என மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
 விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். விருதுநகர் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார்.
         இதில், மாணிக்கம் தாகூர் பேசியதாவது:  
      நான் வெற்றி பெறுவதற்காக கடுமையாக பணியாற்றிய கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மூன்று இடங்களில் பொதுமக்களின் குறைகள், பிரச்னைகளை கேட்பதற்காக விரைவில் அலுவலகங்கள் திறக்க உள்ளேன். அங்கு பொதுமக்கள் தங்கள் பகுதி சார்ந்த பிரச்னைகளை மனுவாக அளிக்கலாம். ரயில்வே தொடர்பான பிரச்னைகளை தீர்க்கவும், ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 
  சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழில், அருப்புக்கோட்டையில் நெசவுத் தொழில், சாத்தூர் தீப்பெட்டித் தொழில் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை தீர்த்து தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன். இந்த வெற்றியானது, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றார்.
  திமுக நகர் செயலர் தனபாலன் வரவேற்றார்.
      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொ.லிங்கம், மதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜாசொக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com