சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 14th June 2019 07:54 AM | Last Updated : 14th June 2019 07:54 AM | அ+அ அ- |

சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி பேருந்து நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், உயர் மின்கோபுர விளக்கு அகற்றப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருள் சூழ்ந்துள்ளது. மேலும், இலவச கழிப்பறைகள் அகற்றப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பேருந்து நிலையத்திலிருந்து மழை நீர் வெளியேற அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீருடன் மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரக் கேடு நிலவுகிறது.
இங்குள்ள குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. அம்மா குடிநீரும் வாரத்துக்கு ஒன்றிரண்டு நாள்களில் மட்டுமே விற்கப்படுவதால், பயணிகள் ரூ. 20 கொடுத்து கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்குகின்றனர்.
அதேபோல், பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியிலும், மதுரை பேருந்துகள் நிறுத்துமிடத்திலும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணிகளும், பேருந்து ஓட்டுநர்களும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள், பயணிகள் வலியுறுத்துகின்றனர்.