குழந்தைகள் தொடர்பான பிரச்னைக்கு பாதுகாப்பு ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்: ஆட்சியர்

குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகள், குறைகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்து

குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகள், குறைகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் மனு அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
        இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான குற்றங்களை தடுத்து, குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசால் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 
     இந்த ஆணையம் மூலம் நாடு முழுவதும் 727 மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகள், குறைகளுக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் முதல் கட்ட அமர்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் 8 மாநிலங்களில் 41 மாவட்டத் தலைமையிடங்களில் நடைபெறுகிறது.
     தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குழந்தைகள் உரிமை மீறல் பிரச்னை மற்றும் குறைகளை கேட்டு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    எனவே, இந்த அமர்வில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பு, ஊட்டச் சத்து, வளர்ச்சி, கல்வி, மருத்துவம், மனம் மற்றும் உடல் நலன் சார்ந்த பிரச்னைகள், குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் சார்ந்த பிரச்னைகள், குழந்தைகளின் இதர உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகள், குறைபாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்த மனுவினை பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளிக் குழந்தைகள், இல்லங்கள், விடுதிகளில் தங்கியுள்ள குழந்தைகள், பெற்றோர், பாதுகாவலர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் அளிக்கலாம்.
    மேலும், இம்மனுவை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-818, வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003 என்ற அலுவலகத்தில் ஜூன் 19 ஆம் தேதிக்குள் நேரடியாக அளிக்கலாம். அல்லது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம் என, அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com