திருத்தங்கல் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றம்
By DIN | Published On : 14th June 2019 07:53 AM | Last Updated : 14th June 2019 07:53 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் அமைந்துள்ள நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா, வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்றான இக்கோயில் ஆனி பிரமோற்சவத் திருவிழா, கடந்த ஜூன் 11 ஆம் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
ஜூன் 12 ஆம் தேதி மாலை சேனை புறப்பாடு நிகழ்ச்சியும், ஜூன்13 இல் நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத் தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர், கோயில் மண்டபத்தில் பெருமாள், செங்கமலத் தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதைத் தொடர்ந்து, கொடியேற்றம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி, தினசரி இரவு சுவாமி மற்றும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூன் 21 ஆம் தேதி தேரோட்டமும், ஜூன் 25 இல் புஷ்பயாகத்துடனும் விழா நிறைவுபெறுகிறது.
இதற்கான ஏற்பாட்டினை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.