இ.புதுப்பட்டி கிராம மக்கள் குடிநீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை
By DIN | Published On : 18th June 2019 07:20 AM | Last Updated : 18th June 2019 07:20 AM | அ+அ அ- |

எரிச்சநத்தம் அருகே இ. புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் - அழகாபுரி சாலையில் எரிச்சநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இ.புதுப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமத்திற்கு கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். மேலும், இங்குள்ள 11 ஆழ்துளைக் கிணறில் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்ற 10 ஆழ்துளைக் கிணறுகள் மோட்டார் பழுது, கூடுதலாக குழாய் இறக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பயன்பாட்டில் இல்லை. இதனால் குடி தண்ணீரை ரூ. 12 விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். மேலும், வீட்டுத் தேவைக்கும் தண்ணீர் இல்லாததால், டிராக்டர் மூலம் விலை கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதுகுறித்து ஊராட்சிச் செயலரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி, ஐந்து பேர் மட்டும் சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதி அளித்தனர்.