வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 18th June 2019 07:21 AM | Last Updated : 18th June 2019 07:21 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பல மாதங்களாக கிராமத்திற்கு குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வடக்கு குப்பணாபுரம் 2 ஆவது வார்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறியும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தி.ராமசாமி தலைமையில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்துப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.