"அருப்புக்கோட்டையில் சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு'

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சீராகக் குடிநீர் வழங்க அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சீராகக் குடிநீர் வழங்க அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்துள்ளதாக அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். 
அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகரின் குடிநீர் ஆதாரமான திருப்புவனம் வைகையாற்றிலிருந்து கிடைக்க வேண்டிய சுமார் 25 லட்சம் லிட்டர்  நீரானது  வறட்சியால் முற்றிலும் கிடைக்காமல் நின்றுபோனது. அதேபோல மற்றொரு குடிநீர் ஆதாரமான தாமிரவருணி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் கிடைக்கவேண்டிய சுமார் 35 லட்சம் லிட்டர் நீருக்கு பதிலாக சுமார் 20 லட்சம் லிட்டர் நீரே கிடைக்கிறது. 
இந்த 20 லட்சம் லிட்டர் நீரைக்கொண்டு 15 அல்லது 20 நாள்களுக்கு ஒரு முறை தான் நகரில் குடிநீர் வழங்க முடிகிறது. இப்பற்றாக்குறை சூழ்நிலையில் குறைந்த அழுத்தத்தில் செல்லும் நீரானது 22,23,26,27,8,9,11 ஆகிய சற்று மேடான பகுதி வார்டுகளுக்கு சீராகச் செல்வதில்லை. எனவே தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் தேவைக்கேற்ப கூடுதல் நீரைப்பெற சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடமும், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதி தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளிடமும் கூடுதலாக 10 லட்சம் லிட்டர் நீர் வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளேன். அத்துடன் திருப்புவனம் வைகை ஆற்றிலிருந்து பகிர்மான குழாய் வரும் வழியில் கூடுதலாக 2 ஆழ்துளைக் கிணறுகளும், திருப்புவனம் பகுதியில் கூடுதலாக 5 ஆழ்துளைக் கிணறுகளும் அமைத்து மொத்தமாக சுமார் 7 அல்லது 8 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளேன்.
 இவை அனைத்தையும் தவிர அருப்புக்கோட்டை நகரில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க  அனுமதி கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளேன். எனவே கடுமையான பற்றாக்குறையிலிருந்து மீண்டுவர முடியும். அதே வேளையில் தென்மேற்குப் பருவமழை இன்னும் ஒரு வாரத்தில் பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் அதுவரை பொதுமக்கள் தங்களால் முடிந்தவரை  குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com