ஆண்டாள் கோயிலில் மழை வேண்டி அதிமுகவினர் யாகம்
By DIN | Published On : 23rd June 2019 12:45 AM | Last Updated : 23rd June 2019 12:45 AM | அ+அ அ- |

மழை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை அதிமுகவினர் யாகம் நடத்தினர்.
தமிழகத்தில் கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள், யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் யாக பூஜைகள் நடைபெற்றன.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, நகரச் செயலாளார் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன்சக்திவேல், சாத்தூர் ஒன்றியச் செயலாளர் சண்முக்கனி, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ்பாண்டியன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.