சிவகாசியில் மழைநீர் செல்லும் வாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 24th June 2019 07:17 AM | Last Updated : 24th June 2019 07:17 AM | அ+அ அ- |

சிவகாசியில் மழைநீர் செல்லும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி-ஆலங்குளம் சாலையில் இருபுறமும் மழை நீர்செல்லும் வாய்க்காலை நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியது.
அதன் பின்னர் வாய்க்கால் பராமரிக்கப் படாததால், பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் வாய்க்காலில் மண் அடைத்துள்ளது. இதனால் மழை பெய்தால் தண்ணீர் சாலையில் தேங்கி, சாலை பழுதாகிவிடுகிறது.
இந்நிலையில் வாய்க்கால் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர், எல்லைக் கல் நடுவதற்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக தோண்டிய மண்ணை முற்றிலுமாக வாய்க்காலில் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மழைநீர் சிறிதளவு கூட வாய்க்கால் வழியே செல்ல இயலாமல் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. ஏற்கெனவே பழுதான வாய்க்கால், இதன் காரணமாக முற்றிலும் அடைபட்டு விட்டது.
எனவே, வாய்க்காலின் உள்பகுதியில் கிடக்கும் மண்ணை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றுவதுடன், மழை நீர் வாய்க்காலை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.