சிவகாசி கல்லூரியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள்
By DIN | Published On : 02nd March 2019 07:29 AM | Last Updated : 02nd March 2019 07:29 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் புவி வெப்பமடைதல் ஆராய்ச்சி மையம் சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
இப்போட்டியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 24 பள்ளிகளைச் சேர்ந்த 260 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து "நெகிழி இல்லா உலகம்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
ராஜபாளையம் ஸ்ரீ ரமணா வித்யாலயா மாண்டிசோரி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜனகருன்ஷா கட்டுரைப் போட்டியில் முதலிடமும், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி.மெட்ரிக்.பள்ளி கே.தியாகேஷ் மற்றும் ஜெ.ராஜா ஆகியோர் விநாடி வினா போட்டியில் முதலிடமும், அதே பள்ளி ஜெ.டேவிட்சன் ஆண்ட்ரோஸ் பேச்சுப் போட்டியில் முதலிடமும், சிவகாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெ.ஹானஸ்ரீ மற்றும் வி.கோபிகா ஆகியோர் ஓவியப் போட்டியில் முதலிடமும் , மேலப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பி.பொன்பிரதாப் மற்றும் ஆர்.பரத்அரவிந்தன் ஆகியோரின் அறிவியல் மாதிரி வடிவமைப்பு முதலிடமும் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் செ.அசோக் பரிசு வழங்கினார்.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சங்கரசிவராமன் வரவேற்றார். பேராசிரியர்கள் லிங்ககுமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உதவிப் பேராசிரியர் டென்சிங்பாலையா நன்றி கூறினார்.